பதிவு செய்த நாள்
14
ஏப்
2023
04:04
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, சொக்கநாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 12:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு, இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம், அடிவாரத்தில் இருந்து பக்தர்களை மலைக்கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. தமிழ் புத்தாண்டையொட்டி, இன்று ஏராளமான பக்தர்கள் காவடியில் எடுத்தும், பால்குடம் எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.