மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழா ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2023 04:04
ஆண்டிபட்டி: மேற்கு தொடர்ச்சி மலையில் தெப்பம்பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரைத் திருவிழா நடந்தது. மலைப்பகுதியில் மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் சிறப்பு. சுனையில் நீராடி வேலப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரை திருவிழாவில் தேனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நேற்று முதல் கூடினர். பல்வேறு ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் மொட்டையிட்டு காவல் தெய்வம் கருப்பசுவாமிக்கு ஆட்டுக்கிடா, சேவல் பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலைக் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகம் சேர்ந்தது. கோயிலுக்கு வரும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்களுக்கு இரு கி.மீ., தூரத்திற்கு முன்பே இடம் ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் குறைவான எண்ணிக்கையில் போலீசார் இருந்ததால் பக்தர்கள் பல இடங்களில் கூட்டத்தில் சிரமம் அடைந்தனர்.