மேலுார்: வெள்ளலுாரில் ஆண்டு தோறும் தமிழ் மாத பிறப்பான சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு நடைபெற்ற வெற்றிலை பிரி திருவிழாவில் கிராமத்து சார்பில் வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டு விவசாய பணிகள் துவங்கப்பட்டது.
வெள்ளலுார் நாடு என்றழைக்கப்படும் 62 கிராமங்களில் உள்ள 11 பிரிவை சேர்ந்த அம்பலகாரர்கள் தலைமையில் இன்று கிராம மக்கள் மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் மந்தையில் ஒன்று கூடினர். அதனைத் தொடர்ந்து ஒரு பிரிவினர தங்கத்தால் ஆன கொழுவை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து தரையில் உழுத பிறகு சாமி கும்பிட்டனர். பின்னர் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகளை மந்தையில் வைக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. வெற்றிலையை வாங்கிய அம்பலகாரர்கள் பொதுமக்களுக்கு பிரிந்து கொடுத்தனர். வெற்றிலையை வாங்கியவர்கள் தங்களுடைய பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பிறகு வயலுக்கு சென்று உழவு பணியை துவங்கினர். இதே போல் தும்பைபட்டியில் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டு அம்பலகாரர்கள் தலைமையில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மூலம் வெற்றிலையை பிரித்து கொடுத்தனர். ஹிந்து,முஸ்லீம் ஒற்றுமைக்காகவும், எல்லா வளமும் கிடைக்க வேண்டி வெற்றிலை பிரி திருவிழா கொண்டாடுவதாக கிராமத்தார்கள் தெரிவித்தனர்.