பதிவு செய்த நாள்
20
ஏப்
2023
08:04
பல்லடம்: பல்லடம் அருகே, அதர்வன பத்ரகாளி கோவிலில், நேற்று, சித்திரை மாத அமாவாசை வழிபாடு நடந்தது.
பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரத்தில் அதர்வண பத்ரகாளி பீடம் உள்ளது. இங்கு, 16 அடி உயரம் கொண்ட பத்ரகாளி அம்மன், பிரத்யங்கிரா தேவியாக அருள்பாலிக்கிறார். நேற்று முன்தினம், ஸ்ரீமங்கள மகா சண்டி ஹோமத்துடன் சித்திரை மாத அமாவாசை வழிபாடு துவங்கியது. நேற்று நடந்த சிறப்பு ஹோமத்தை நடத்திய தத்தகிரி சுவாமிகள் பேசுகையில், ஏவல், பில்லி, சூனியம், திருஷ்டி, தோஷங்கள் அனைத்தையும் போக்குபவள் அம்பாள். வர மிளகாய் வழிபாடு நடத்துவதன் மூலம் பகைவர் பயம், எம பயம் தீரும். அமாவாசை தோறும் நடக்கும் நிகும்பலா யாகத்தில் பங்கேற்பதன் மூலம், அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும் என்றார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு நேற்று நடந்த நிகும்பலா யாகத்தில், வர மிளகாய், வஸ்திரங்கள், தானியங்கள், கனிகள், மாலை, உள்ளிட்டவை யாக குண்டத்தில் அர்ப்பணிக்கப்பட்டன. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தீர்த்தங்கள் கோவிலை சுற்றி எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சிறப்பு வெள்ளி கவச அலங்காரத்தில் பிரத்தியங்கரா தேவி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.