ராமேஸ்வரம் கோயிலுக்கு ரூ.50 கோடி மானியம்: சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2023 09:04
சென்னை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட பகுதிகளை மேம்படுத்த ரூ. 50 கோடி மானியம் வழங்கப்படும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று(ஏப்ரல் 19) ஹிந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:
* ராமேஸ்வரம் அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட பகுதிகளை மேம்படுத்த ரூ. 50 கோடி மானியம் வழங்கப்படும்.
* சுவாமி மலையில் பத்தர்கள் வசதிக்காக மின் தூக்கி அமைக்கப்படும்.
* 50 கோவில்களில் உள்ள தேர்களுக்கு பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்படும்.
* நடப்பாண்டு முதல் கோயில் பணியாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் இறந்து விட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு வழங்கப்படும்.
* ராமேஸ்வரம்- காசி ஆன்மிக பயணத் திட்டத்தில் 200 பேர் காசிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
* சங்கரன்கோயில் சங்கரநாராயணசாமி கோயிலில் உள்ள பழமையான ஓவியங்கள் ரூ.2 கோடியில் பாதுகாக்கப்படும்.
* மதுரை கள்ளழகர் கோயில்- பழமுதிர் சோலை வரை பக்தர்கள் செல்வதற்கு ரூ.2 கோடியில் மதிப்பில் 4 புதிய சிற்றுந்துகள் வாங்கப்படும்.
* 19 கோயில்களில் புதிய திருத்தேர்கள் ரூ.11.83 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
* 632 திருக்கோயில்களுக்கு ரூபாய் 128 கோடி செலவில் குடமுழுக்கு நடந்துள்ளது.
* ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் மொத்தமாக 714 கோயில்கள் கண்டறியப்பட்டன.
* தமிழகத்தில் மொத்தம் 29 கோயில் யானைகள் உள்ளது. சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டவுடன் வெளிநாட்டிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
* பழையாறை, திண்டல், உள்ளிட்ட 15 திருக்கோயில்களில் ரூ.725.98 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரங்கள் கட்டப்படும்.
* வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 3 நாள் தைப்பூச விழாவிற்கு வருகை தரும் 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
* திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகள் கடலில் தீர்த்தமாட 350 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைக்கப்படும்.
* 745 திருக்கோயில்களில் ரூ.331 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
* திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அவர்களுக்கு 4 கிராம் தங்க தாலி திருக்கோயில் சார்பில் வழங்கப்படும்
* திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற 42 நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்றுள்ளார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரு சல்லிக்காசு கூட விளம்பரத்திற்காக செலவு செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.