பதிவு செய்த நாள்
27
ஏப்
2023
06:04
மேட்டுப்பாளையம்: மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில், மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 13ம் ஆண்டு திருவிழா, கடந்த, 11ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 18ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. கோவிலில் திருவிளக்கு பூஜை, கரகம், பூச்சட்டி எடுத்தல், வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகானம் பஜனை குழுவினரின் வள்ளிக்கும்மி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த, 25ல் அம்மன் சுவாமி அழைக்கப்பட்டது. நேற்று காலை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்பு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். இன்று மஞ்சள் நீராட்டும், 28ல் மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.