மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2023 06:04
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற பவளநிறவல்லியம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்து நடத்தப்படும் வலை வீசும் படலம் திருவிழாவிற்காக நேற்று காலை 10:30 மணியளவில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. கோயில் சன்னதி முன்புறம் யாக வேள்வி வளர்க்கப்பட்டது. கொடி மரத்தில் சிவாச்சாரியார்களால் கொடி பட்டம் ஏற்றப்பட்டது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவபெருமான் திருவிளையாடல் விளக்கும் 57வது படலமாக கடலுக்குள் வலை வீசும் படலம் காட்சிகள் வருகிற மே 5 காலை 7:00 மணியளவில் அரங்கேற்றப்பட உள்ளது. அன்றைய தினம் சுறாமினுக்கு சாப விமோசனம் அளிக்கப்பட்டு காலை 9:30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்ஸவமும், திருவீதி உலாவும் நடக்கிறது. புராண முக்கியத்துவம் வாய்ந்த வலை வீசும் படலம் நிகழ்வினை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் அன்றைய தினம் கடற்கரையில் கூடுவார்கள். தொடர்ந்து பத்து நாட்களும் காலை மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளுடன் உற்ஸவமூர்த்தி சுவாமி பிரகார வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்து வருகின்றனர்.