பதிவு செய்த நாள்
27
ஏப்
2023
06:04
செஞ்சி: பாலப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உட்பட 5 கோவில்கள் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
செஞ்சி அடுத்த பாலப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 24ம் தேதி காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமமும் மாலை 5 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. இரவு சாமி அஷ்டபந்தனம் சாற்றுதலும், கண் திறக்கும் வைபவமும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோ பூஜையும், நான்காம் கால பூஜையும், 8.45 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. 9 மணிக்கு விநாயகர் கோவிலிலும், 9.15 மணிக்கு பொறையாத்தம்மனுக்கும், 9.30 மணிக்கு அம்மச்சார் அம்மனுக்கும், 10 மணிக்கு அய்யனாரப்பனுக்கும், 11.15 மணிக்கு திரவுபதியம்மன் கோவிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திரவுபதியம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர்.