பதிவு செய்த நாள்
28
ஏப்
2023
09:04
திருப்பூர்: ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிட வசதிகள் தன்னிறைவாக உள்ளதா என கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க, சுற்றுலா துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் பலவும், பழமை வாய்ந்தவை; கலைநயம் நிறைந்துள்ளவை. இவை சுற்றுலா தலங்களாகவும் விளங்குகின்றன. அதிகளவு பக்தர்கள், இங்கு திரள்வதால், அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள், வாகன நிறுத்துமிட வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை கண்காணிக்கும் பொறுப்பு, அந்தந்த மாவட்ட சுற்றுலா துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா துறை அலுவலர்கள், அரசின் வழிகாட்டுதல் படி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதை அறிந்து, நிறை, குறை, தேவைகள் குறித்த அறிக்கையை, அந்தந்த மாவட்ட கலெக்டர் வாயிலாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளனர். பல கோவில்களில், இத்தகைய அடிப்படை பணிகளை, சுற்றுலா துறை சார்பில் மேற்கொள்ளவும், அரசு, வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.