பதிவு செய்த நாள்
30
ஏப்
2023
08:04
அவிநாசி: சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஐந்தாம் நாளில், இரவு பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெற்றது. குழந்தைகள்,பெண்கள் என ஏராளமானோர் நான்கு ரத வீதிகளிலும் வழிபட்டனர்.
தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய தேர் கொண்டது,சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தளம்,கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானது எனவும்,காசியில் வாசி அவிநாசி என போற்றதலுக்குரிய பழமை வாய்ந்த அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 26ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 27ம் தேதி அதிகார நந்தி கிளி பூதம் அன்ன வாகன காட்சிகள்,28ம் தேதி கைலாச வாகனம் புஷ்ப பல்லாக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் ஐந்தாம் திருநாளான நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டு குழுவினர் சார்பில் பஞ்சவாத்தியம்,வானவேடிக்கை, அன்னதானம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.
மேலும், மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமானும்,ரிஷப வாகனத்தில் சோமா ஸ்கந்தரும்,காமதேனு வாகனத்தில் கருணாம்பிகை அம்மனும்,மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய பெருமானும்,ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும்,கருட வாகனத்தில் கரி வரதராஜ பெருமாளும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அலங்காரம், மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வாகனங்களில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் முன்பாக வந்து பூஜைகள் நடைபெற்றது.இதில்,நான்கு ரத வீதிகளிலும் சாமி திருவீதி உலா வந்தது. ஊர்வலத்தில் சிவனடியார்களின் சிவகண பூத பஞ்சவாத்தியம் இசைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாளை,பஞ்ச மூர்த்திகளும்,பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுவதை தொடர்ந்து,மே 2ம் தேதி, மே 3ம் தேதி ஆகிய நாட்களில் பெரிய தேரும்,மே 4ம் தேதி அம்மன் தேரும் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.