அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடந்தது.
அன்னூர் மாரியம்மன் கோவில், 33 வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 18ம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி கம்பம் நடுதல், காப்பு கட்டுதல், பூவோடு எடுத்தல் ஆகியவை நடந்தன. 28 ம் தேதி வரை தினமும் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. நேற்று இரவு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மதியம் அபிஷேக ஆராதனையும், இரவு அணிக்கூடை உற்சவமும் நடக்கிறது. நாளை காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலையில் செண்டை மேளம், ஜமாப் மற்றும் வான வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா நடக்கிறது. வரும் 3ம் தேதி மதியம் அபிஷேக ஆராதனையும், மாலையில் அலகு குத்தி அம்மனை தரிசிக்கும் வைபவமும் நடக்கிறது. இரவு அம்மன் மகிமை என்னும் தலைப்பில் கவிஞர் ராமகிருஷ்ணனின் சொற்பொழிவு நடக்கிறது.