பதிவு செய்த நாள்
01
மே
2023
09:05
திருவண்ணாமலை: ‘‘திருவண்ணாமலையில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில், அம்மனி அம்மன் மடம் புதுப்பிக்கப்படும்,’’ என, அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சித்ரா பவுர்ணமி திதி வரும், 4ம் தேதி, இரவு, 11:59 முதல், மறுநாள், 5ம் தேதி இரவு, 11:33 மணி வரை உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வரவுள்ளனர். இதற்காக பக்தர்களுக்கு அடிப்படை வசதி உள்ளிட்ட முன்னேற்பாடு பணி குறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் வேலுவும் இதில் பங்கேற்றார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 23 ஆயிரம் சதுரடிக்கு மேற்பட்ட அம்மனி அம்மன் மடம் இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அது, இரண்டு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. அறங்காவலர் நியமனத்திற்கு நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். குழு பரிந்துரைபடி, விரைவில் அறங்காவலர் நியமிக்கப்படுவர். அறநிலையத்துறைக்கு சொந்தமான, 4,250 கோடி ரூபாய் மதிப்பு சொத்து இதுவரை மீட்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு, வனத்துறை சட்டப்படி, யானை வாங்க இடமில்லை. புதியதாக கோவில்களில், யானைகளை பெறக்கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.