மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகையில் தண்ணீர் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2023 09:05
ஆண்டிபட்டி : மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நேற்று(ஏப்.,30) வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும். சில மாதங்களாக கோடை தாக்கத்தால் மழை குறைந்து ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை. பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரில் குறைந்த அளவு மட்டும் வைகை அணையில் சேர்கிறது. மதுரை சித்திரை திருவிழாவிற்காக ஆண்டுதோறும் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு அணையில் நீர் இருப்பு போதுமான அளவு உள்ளது. இதனைத் தொடர்ந்து இத்திருவிழாவுக்காக அணையில் இருந்து நேற்று காலை 11:00 மணிக்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் கீழ் பகுதியில் உள்ள 3 மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நீர்மட்டம் 53.87 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீருக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் நீர் வெளியேறுகிறது. பொதுப்பணித்துறையினர் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து வைகை அணையில் இருந்து ஏப்.30 முதல் மே 5 வரை 216 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது. திறக்கப்படும் நீர் மதுரை சித்திரை திருவிழாவில் மே 5 ல் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காகவும், ஆற்றுப் படுகையில் உள்ள குடிநீர் திட்ட கிணறுகளின் நீர் ஆதாரத்தை பெருக்கவும் பயன்படும், என்றனர்.