திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் நிறைவு; தேர் நிலைக்கு வந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2023 11:05
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் மழையால் தடைப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேர்வடம் பிடித்து நிலைக்கு வந்தது. பிரமோத்ஸவம் நிறைவடைந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரமோத்ஸவம் 12 நாட்கள் நடைபெறும். ஏப்.25 ல் கொடியேற்றி காப்புக்கட்டி பிரமோத்ஸவம் துவங்கியது. தினசரி இரவு வாகனங்களில் பெருமாள் திருவீதி வலம் வந்தார். 10ம் திருநாளான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4:45 மணிக்கு தேரோட்டம் வடம் பிடிக்கப்பட்டது. அப்போது பலத்த மழை துவங்கியது. இதனால் மாலை 5.35 மணி அளவில் தேர் முதல் வளைவில் திரும்பிய சற்று தூரத்தில் நின்று விட்டது. தொடர்மழையால் பாதுகாப்பு கருதி மீண்டும் வடம் இழுக்கவில்லை. மீண்டும் நேற்று காலை 10:16 மணி அளவில் மயில்ராயன் கோட்டை, பட்டமங்கல நாட்டர்கள் கூடி வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. கோயிலை வலம் வந்து காலை 11:16 மணிக்கு நிலைக்கு வந்தது. பக்தர்கள் உற்சாகத்துடன் தேர் வடம் பிடித்தனர். திருக்கோஷ்டியூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டும் தொடர் மழையால் தேரோட்டம் 2 நாட்கள் நடந்தது. இரவில் புஷ்பயாகம் வசித்தல் நடந்தது. இன்று இரவு நடைபெறும் புஷ்பப் பல்லக்குடன் பிரமோத்ஸவம் நடைபெறும்.