பதிவு செய்த நாள்
08
மே
2023
01:05
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பவுர்ணமி நாளில், திருத்தேர் விழா நடக்கும். இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கடந்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்னவாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, செங்கோதை அம்மன் அழைப்பு நடந்தது. சித்ரா பவுர்ணமி நாளை ஒட்டி திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 3:30 மணிக்கு யானை வாகன உற்சவம், தொடர்ந்து, 4:00 மணிக்கு சின்னத்தேர் உற்சவமும், மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. 6ம் தேதி பரிவேட்டையும், நேற்று சேஷ வாகன தெப்போற்சவமும் நடந்தது. விழாவை ஒட்டி, குருவரிஷி மலை மேல்முடி அரங்கநாதர் அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.