மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா; அலகு குத்தி பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2023 03:05
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தொப்பம்பட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
கடந்த, 2ம் தேதி பூச்சாட்டுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், சக்தி கரகம் அழைத்தல், பூவோடு எடுத்தல், அணி கூடை கொண்டு வருதல், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை கரகம் எடுத்தல், அம்மனுக்கு அலங்கார பூஜை, முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் சன்னதியை அடைதல், அலங்கார பூஜை ஆகியன நடந்தன. தொடர்ந்து, குறிஞ்சி நகர் பகுதியில் இருந்து பக்தர்கள் அக்னி கரகம் மற்றும், 10 அடி அலகு குத்தி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஜமாப் நிகழ்ச்சி, சிறுவர்கள் கம்பு சுற்றும் நிகழ்ச்சி ஆகியன நடந்தன. விழாவை ஒட்டி அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, முத்தாளம்மன் அழைத்தல், மாவிளக்கு, அன்னதான நடந்தது. மஞ்சள் நீராட்டு விழா உடன் இன்று விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.