நரிக்குடி: நரிக்குடி அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மாசாணம் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. நரிக்குடி மறையூரில் பிரசித்தி பெற்ற மாசாணம் சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் நடைபெறுவது வழக்கம். நள்ளிரவில கப்பரை பூஜை நடக்கும். திருவிழாவில் கலந்து கொள்ளவும், தரிசனம் செய்யவும் பெண்களுக்கு அனுமதியில்லை. சுவாமிக்கு பொங்கல் வைத்து ஆடுகள்,சேவல்களை பலியிட்டு பூஜைகள் நடைபெறும். இதனையடுத்து நள்ளிரவு கிடா, பன்றி பலியிடுவர். எறிபூஜை நடைபெறும். எறிபூஜையாக கொடுக்கப்படும் உதிரம் கலந்த உணவும், தண்ணீரும் மீண்டும் பூமிக்கு திரும்பாது என்பது ஐதீகமாகும். பக்தர்கள் சார்பாக நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட ஆடுகள்,150 க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு, கறிவிருந்து அன்னதானம் நடந்தது. காலை 5 மணிக்கு தொடங்கி சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவடைவது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். சென்னை,மதுரை,கோவை உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.