பதிவு செய்த நாள்
29
மே
2023
01:05
பந்தலூர்; நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பனியர் இன பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். இதில் பந்தலூர் அருகே பொன்னானி, அம்பலபாடி பகுதியில் உள்ள பனியர் சமுதாய மக்கள், தங்கள் கோவில் திருவிழாவை கடந்த மூன்று நாட்களாக நடத்தினார்கள்.
ஏழு நாட்கள் விரதம் இருந்து இவர்களின் குலதெய்வமான மாரியம்மன் மற்றும் தம்பிராட்டி அம்மன் கோவில்களில் ஏழு நாட்கள் விரதம் இருந்து நள்ளிரவில் சிறப்பு பூஜை செய்து, விடியும் வரை தங்கள் கலாச்சார நடனங்களை நடத்தினார்கள். தொடர்ந்து ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள வன தேவதைகள் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விரதம் இருந்த பத்துக்கும் மேற்பட்ட, ஆண்கள் எச்சில் தெரியாமல் வாய்களை வாழை இலையால் மூடிக்கொண்டு, சந்தனம் அரைத்தனர்.
பின்னர் ஆற்றங்கரையில் சென்று குளித்து முடித்த கையோடு, தங்கள் குல தெய்வ வாள்கள் மற்றும் பிரம்புகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து சாமி ஆடி, தேங்காய் உடைத்து அருள் வாக்கு கூறியதுடன், அரிசி மற்றும் தீர்த்தம் கொடுத்தனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் கலாச்சார உடையில் வந்து, நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். பூஜைகளில் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று அருள் வாக்கு கேட்டது அனைவரையும் கவர்ந்தது. இதில் பந்தலூர் தாலுகா முழுவதும் இருந்து பணியர் சமுதாய மக்கள் தங்கள் குடும்பங்களுடன் பங்கேற்றனர்.