பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.
பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவன் உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள். பிரதோஷ வேலை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலமாகும். பிரதோஷ வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவனை வணங்க வேண்டும். வீட்டில் அல்லது கோவிலில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள். இன்று சிவனை வழிபட்டால் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். சிவபெருமான் தினமும் மாலை நேரத்தில் நந்தியின் கொம்புகளுக்கிடையில் நடனம் புரிகிறார். பகலில் அல்லல்படும் உயிர்களின் மனச்சோர்வு நீங்கவும், இரவு நிம்மதியாக உறங்கவும் இப்படிச் செய்கிறார். அந்த வேளையில் அவரை வழிபட்டால் கவலைகள் நீங்கும். பிரதோஷத்தன்று மாலையில் வழிபடுவது இன்னும் சிறப்பு.
கோயில் செல்ல முடிய வில்லையா: கோயிலுக்குச் செல்வதே சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டிலிருந்து வழிபடலாம். பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்குரிய சிவாயநம, நமசிவாய ஐந்தெழுத்து மந்திரங்களை ஜெபிக்கலாம். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாராயணம் செய்யலாம். பிரதோஷ வேளையில் சிவனை நினைத்து மனதால் வழிபட்டாலும் பலன் உண்டு.