பதிவு செய்த நாள்
02
ஜூன்
2023
10:06
தவறுதலாக ஒரு எழுத்தை பேப்பரில் எழுதினால் அதை ரப்பரால் அழிக்க முடியும். பலருக்கு நினைத்த செயல் நடக்கவில்லை என்றாலோ, நடந்த செயல் தாமதப்பட்டாலோ எல்லாம் தலையெழுத்து என பிரம்மாவை நினைத்து தன்னை தானே நொந்து கொள்வர். சரியில்லாத தலையெழுத்தை அழித்து எழுத ரப்பர் ஒன்று இருக்கிறது. இது தெரியாமல் நிறைய பேர் துன்பப்படுகின்றனர். பிரச்னைகளை எதிர்கொள்ள தயங்குகின்றனர். அவர்களுக்கான ரப்பர் தான் முருகப்பெருமானின் திருவடி என்கிறார் அருணகிரிநாதர். திருச்செந்துாரிலுள்ள மீன்கள் விளையாடி அங்குள்ள வயல்களும், முருகன் கழுத்திலுள்ள கடம்பமாலை மணத்தினால் பெண்களின் மனமும், முருகன் கையிலுள்ள வேல்பட்டு சூரனும் அவனுடைய மலையும் அழிந்தது. அதைப்போல பிரம்மா எழுதிய என் தலையெழுத்து முருகப்பெருமானின் திருவடி பட்டு அழிந்தது என்கிறார். தினமும் இப்பாடலை பாடினால் தலையெழுத்து மாறும்.
சேல்பட்டு அழிந்தது செந்துார் வயல் பொழில் தேன் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வேர்ப்பும் அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன்கையெழுத்தே.
நால்வர் அருள் வேண்டுமா...: விநாயகர், முருகன், சிவபெருமான், பெருமாளின் அருளை ஒரு சேர பெற வேண்டுமா... கீழ்கண்ட இந்த பாடலை தவறாமல் பாடுங்கள். நம்புங்கள் நல்லதே நடக்கும். நால்வர் அருள் கிடைக்கும்.
முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
வளமான வாழ்க்கைக்கு...: நம் மனதிற்கு அதிபதியான சந்திரன் முழு ஒளியோடு திகழும் நாளே பவுர்ணமி. அன்று வழிபாடு செய்தால் மனமும் பூரண சந்திரனைப்போல் பிரகாசமாக இருக்கும். அதிலும் முருகப்பெருமானோடு தொடர்புடைய விசாகம், கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்கள் பவுர்ணமி நாளை ஒட்டியே வரும். இந்த மூன்றும் முருகப்பெருமானை வழிபட உகந்த நாட்கள். அதிலும் முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகத்தன்று அவரை வழிபடுவோம். வளமான வாழ்க்கையை பெறுவோம்.
மூலமந்திரம்
* முருகனின் மூலமந்திரம் - ஓம் சரவணபவாய நமஹ
* முருகனுக்கு விசாகன் என்றும் பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருள்.
* நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், முருகப்பெருமானின் அவதாரம் என பலரும் பாடியுள்ளனர்.
* கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, திருப்பரங்குன்றம் என பல இடங்களில் முருகனுக்கு குடைவரைக்கோயில்கள் உள்ளன.
* அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழ் பாடல்களில் முருகப்பெருமானை, பெருமாளே என போற்றுகிறார்.
குமாரஸ்வாமி: உலகத்தில் எல்லாமாகவும் இருக்கிற பரமாத்மாவை ஸ்வாமி என அழைக்கிறோம். சிவபெருமான், மஹா விஷ்ணு, விநாயகர் என அனைவரையும் பொதுவாக நாம் இப்படி குறிப்பிடுவோம். ஆனால் இந்த ஸ்வாமி என்கிற பெயர் ஒருவருக்கு மட்டும்தான் சொந்தமானது. அனைவரும் இவரிடம் இருந்தே அந்தப் பெயரையே கடனாக பெற்றுள்ளனர். அவர் யார் தெரியுமா? குழந்தையாக இருக்கும் குமாரஸ்வாமியான முருகப்பெருமான்.
சமஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு அமரகோசம் என்று பெயர். கோசம் என்றால் பொக்கிஷம். இதை இயற்றியவரின் பெயரை வைத்து அமரம் என்கிற பெயர் வந்தது. இந்த நுாலில் வேறெந்த தெய்வத்துக்கும் ஸ்வாமி என்ற பெயர் இல்லை. சுப்ரமணியருக்கு மட்டுமே உண்டு. இதோ அந்த பாடலின் வரி.
தேவஸேனாபதி; சூர; ஸ்வாமீ கஜமுகாநுஜ
வயலுார் இருக்க அயலுார் எதற்கு?; வயலுார் இருக்க அயலுாரைத் தேடி அலைவானேன்? என்பது பழமொழி. பன்னிரண்டு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் முருகன்இருக்கும் ஊர் திருச்சி வயலுார். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து குதித்து உயிர் விட எண்ணிய அருணகிரிநாதரை கைகளால் தாங்கிய முருகன், வயலுாருக்கு வா என கட்டளையிட்டார். அங்கு தான் திருப்புகழின் முதல் பாடலுக்கு முத்தைத்தரு பத்தித்திருநகை என அடி எடுத்துக் கொடுத்தார். 1307 பாடல்கள் கொண்ட திருப்புகழில் 18 பாடல்கள்
பெற்றது இத்தலம்.
தெரியுமா உங்களுக்கு...: எந்தக்கடவுளுக்கும் இல்லாத சிறப்பு முருகனுக்கு உண்டு. குழந்தை, குமரன், வயோதிக கோலத்தில் காட்சி தருபவர் இவர் மட்டுமே. குழந்தை வேலாயுத சுவாமியாக பழநி அடிவாரத்திலுள்ள திருஆவினன் குடியிலும், குமரனாக திருப்பரங்குன்றம், திருத்தணி கோயில்களிலும், வயோதிகத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலையிலும் அருள் பாலிக்கிறார். இம்மூன்று வடிவத்தையும் வணங்கினால் நன்மை கிடைக்கும்.
எமனும் கூட அஞ்சுவான்: ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல் விழித்தார் பிரம்மா. அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் முருகன். பின்னர் தானே படைப்புத் தொழிலில் ஈடுபட்டார். அவரால் படைக்கப்பட்ட அனைவரும் பாவச் செயலில் ஈடுபடாமல் இருந்தனர். எமதர்மனும் அவர்களைக் கண்டு அஞ்சினான். இதனால் தான் மரணத்தின் பிடியில் உள்ளவர்கள் கூட முருகப்பெருமானைச் சரணடைகிறார்கள். திருச்செந்துார் பன்னீர் இலை விபூதியும், ஆதிசங்கரர் பாடிய சுப்பிரமணிய புஜங்கம் ஸ்தோத்திரமும் நோய் தீர்க்கும் மகிமை கொண்டவை.
திசைக்கு ஒரு காட்சி; திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசல தலம், விட்டணு துருவம், கந்த மாதனம், கந்த மலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதல் படைவீடு என திருப்பரங்குன்றத்திற்கு பல பெயர்கள் உண்டு. மலையின் வடக்கில் கைலாயம் போலவும், கிழக்கில் பெரும் பாறையாகவும், தெற்கில் யானை படுத்திருப்பது போலவும், மேற்கில் சிவலிங்கம் போலவும் இந்த மலை காட்சியளிக்கிறது.