பதிவு செய்த நாள்
04
ஜூன்
2023
08:06
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், 34 ஆண்டுகளுக்கு பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு வெகு விமர்சையாக நடந்தது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில், கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஒன்றாகும். திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற சிறப்பிடைய தலமாகும். பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள், இக்கோவிலில் காணப்படுகிறது. கரிகாலச் சோழனுக்கு கருணை பாலித்த இக்கோயிலில் இறைவனை சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும் கருணாசாமி, கருந்திட்டை மகாதேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.
மேலும், நாயக்க மற்றும் மராட்டிய மன்னர்களால் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரம் தொடங்கி விசாக நட்சத்திரம் வரை பத்து நாட்கள் வைகாசி மகா உற்சவம் நடைபெறும். உற்சவம் முடிந்து 11 வது நாளில் பிச்சாடனார் கரந்தையில் நான்கு வீதிகளில் வரும் வருவார். பின்னர் 12ம் நாள் கண்ணாடி பல்லக்கில் சுவாமி அம்பாளும் ஏழூர் பல்லக்கு புறப்படுவது வழக்கம். இவ்விழா கடந்த 1988 ம் ஆண்டு வரை அரண்மனை தேவஸ்தானத்தால் நடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இவ்விழா நடைபெறவில்லை. இதையடுத்து மீண்டும் ஏழூர் பல்லக்கு விழாவை நடத்திட வேண்டும் என பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த மே.24ம் தேதி இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து கண்ணாடி பல்லக்கில் சோமஸ்கந்தர், பெரியநாயகிஅம்மன், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மன் ஆகியோர் எழுந்தருள இன்று (04ம் தேதி) அதிகாலை புறப்பாடு துவங்கியது. மேளதாளம் முழங்க,வாணவேடிக்கையுடன் பல்லக்கு கருந்தட்டான்குடி, வெண்ணாற்றங்கரை, பள்ளியக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலுார், குருங்கலூர், கடகடப்பை, உதாரமங்கலம், சித்தர்காடு, மாரியம்மன் கோவில், சின்ன அரிசிகாரத் தெரு, கீழவாசல், அரண்மனை, கீழவீதி, தெற்கு, மேலவீதி, வடக்கு வீதி, சிரேஸ் சத்திரம், பூக்குளம், செல்லியம்மன்கோவில் வழியாக சென்று நாளை(5ம் தேதி) மீண்டும் கோவிலை வந்தடையும். விழாவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 34 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால், அப்பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.