பதிவு செய்த நாள்
01
அக்
2012
10:10
ஸ்ரீபெரும்புதூர்: புரட்டாசி மாத, சாற்று முறை உற்சவ தினத்தையெட்டி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஸ்ரீபெரும்புதூர் வருகிறார். ஸ்ரீபெரும்புதூர், வடபுஷ்கரணி தெருவில், சீனிவாச பெருமாள் மற்றும் வேதாந்த தேசிகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வேதாந்த தேசிகன் அவதார உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த உற்சவத்தின் சாற்று முறை தினத்தன்று, திருவள்ளூரில் உள்ள வீரராகவப் பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் வருவது வழக்கம். இதற்காக, இன்று இரவு, 10 மணிக்கு வீரராகவப் பெருமாள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்படுகிறார். அவரை வரவேற்க, ஸ்ரீபெரும்புதூர் எல்லைக்கு உட்பட்ட, செங்காடு அருகே, வேதாந்த தேசிகன் காத்திருந்து, மேள தாளங்களுடன் வாண வேடிக்கையுடன் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.நாளை, கோவிலில் நடைபெறும் சாற்று முறை உற்சவத்தில் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, இரவு, வேதாந்த தேசிகரும், வீரராகவப் பெருமாளும் இணைந்து, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிப்பர். நாளை மறுநாள், அதிகாலை வீரராகவப் பெருமாள் விடைபெற்று, திருவள்ளூர் திரும்புவார். இவ்விழாவில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை வழிபடுவர்.