சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்த நடராஜர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2023 05:06
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழாவில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நேற்று (25ம் தேதி) நடைபெற்றது. தொடர்ந்து சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. விழாவில் இன்று (26ம் தேதி) சூரிய உதயத்திற்கு முன்பு சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி, நடைபெற்றது. சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சியும், பஞ்சமூர்த்தி வீதிஉலா நடந்தது. பின்னர் பிற்பகல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி முன்னுக்குப் பின்னுமாய் 3 முறை நடனமாடி பக்தர்களுக்கு ஆனித்திருமஞ்சன தரிசனம் தந்தார். திருமஞ்சன தரிசனத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நாளை (27ம் தேதி)பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது.
சர்ச்சை பதாகை நீக்கம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையின் மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் சார்பில் வைக்கபட்ட பதாகை சர்ச்சையை ஏற்படுத்தியது. கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பக்தர்கள் புகாரால் பதாகையை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தீட்சிதர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று தீட்சிதர்கள் சார்பில் வைக்கபட்ட சர்ச்சை பதாகையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர்.