பதிவு செய்த நாள்
03
அக்
2012
10:10
சென்னை: தமிழகத்திலிருந்து, 427 யாத்ரிகர்கள், நேற்று "ஹஜ் பயணம் புறப்பட்டனர். ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து, ஆயிரக்கணக்கானோர், "ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு, தமிழக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, அந்தமான்-நிகோபார் தீவுகளைச் சேர்ந்த, 3,800 பேர், சென்னையிலிருந்து, ஒன்பது விமானங்களில், "ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். நேற்று, "ஹஜ் பயணத்திற்கான, முதல் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. ஹஜ் புனித யாத்திரைக்கு, 427 பேர் புறப்பட்டுச் சென்றனர். இதில், 218 பேர் ஆண்கள். 205 பேர் பெண்கள். நான்கு குழந்தைகள் அடக்கம். இதற்காக சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் காலை 10:30 மணிக்கு சிறப்பு விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் வரும் 10ம் தேதி வரை தினமும் காலை 10:30 மணிக்கு சென்னையில் இருந்து ஜெட்டா புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காலை, 10:00 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில், வழியனுப்பும் விழா நடந்தது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகமது ஜான், இந்திய "ஹஜ் குழுவின் துணைத் தலைவர், அபுபக்கர், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் பயணிகளை வழியனுப்பி வைத்தனர்.