பதிவு செய்த நாள்
29
ஜூன்
2023
05:06
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலிலிருந்து, சற்றுத்தொலைவு தென்மேற்கில் பக்தவச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தான், சித்திரை பெருவிழா உள்ளிட்ட உற்சவங்கள் நடக்கும். இங்குள்ள பெரியதெரு பகுதியினர், கோவிலின் மேற்கு ராஜகோபுர நுழைவாயில் வழியே கோவிலுக்கு செல்வர். கோவில் அருகில் கட்டடம் கட்டும் தனிநபர் ஒருவர், கட்டுமான பொருட்களையும், கட்டடஇடிபாடுகளையும், ராஜகோபுர நுழைவாயில் பகுதியை ஆக்கிரமித்து குவித்துள்ளனர். ஜல்லிக்கற்கள், செங்கல், சிமென்ட் மூட்டைகள், கலவை இயந்திரம் உள்ளிட்டவை, கோவில் வாயிற்பகுதியை அடைத்து பக்தர்களுக்கு இடையூறாக உள்ளன. இது, ஆகம விதிகளுக்கும் புறம்பானதாக கருதப்படுகிறது. வடக்கு ராஜகோபுர நுழைவாயில் பகுதியில், லாரிகள் ஆக்கிரமித்து உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்தி, பக்தர்களுக்கு வழி ஏற்படுத்த, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.