பதிவு செய்த நாள்
30
ஜூன்
2023
02:06
திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று, ஆனி வருஷாபிேஷகம் நடந்தது. ஆனால், அதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல், பெண் வி.ஐ.பி., ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஹிந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயகுமார் கூறியதாவது: திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து, ஆண்டுதோறும் குறிப்பிட்ட அந்த நாளில், வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று, ஆனி வருஷாபிஷேகம் என்பதால், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு அதிகாலை வந்தனர். ஆனால், இந்த ஆண்டு மட்டும் திடீரென போலீசை வைத்து, வருஷாபிஷேக நிகழ்ச்சிக்கு பக்தர்கள் செல்லாமல் தடுத்து விட்டனர். கோவிலில் பெருந்திட்ட வளாக பணி நடைபெறுவதால், விமான தளம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என, கோவில் நிர்வாகம் கூறி விட்டது. வற்புறுத்தி கேட்டதற்கு, மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி - தெய்வானை தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் வீதியுலாவும் நடக்கிறது. அதில், யார் வேண்டுமானலும் சுவாமியை தரிசிக்கலாம் என, கூறி விட்டனர். தை உத்திரம் நட்சத்திரத்தில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், ஆண்டுதோறும் அந்த தினத்தில், பிரதிஷ்டாபிஷேகம் செய்யப்படும். அதேபோல, ஆனி சுவாதியில் வருஷாபிஷேகம் நடக்கும். இப்படி ஆண்டுக்கு இரு முறை மட்டும்தான் மூலவர் சண்முகம், வள்ளி- தெய்வானை, பெருமாள் உள்ளிட்ட கோபுர விமானங்களுக்கு, புனித நீர் அபிஷேகம் செய்யப்படும். அதை அருகில் இருக்கும் விமான தளத்தில் நின்று பக்தர்கள் தரிசிப்பர். இந்த உற்சவத்தை காண முடியாதபடி பக்தர்களுக்கு தடை ஏற்படுத்திய கோவில் நிர்வாகம், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் உமரி சங்கர் மனைவி பிரம்ம சக்தி என்பவரை மட்டும், விமான தளத்துக்கு செல்ல அனுமதித்து உள்ளனர். போத்திகள், சிவாச்சாரியார்கள், வேதபாரயண திரிசுந்தரர்கள், கோவில் நிர்வாக கமிட்டியினர், ஊழியர்களோடு, அந்த பெண் மட்டும் அனுமதிக்கப்பட்டது எப்படி? பிரம்ம சக்தி, அப்படி என்ன சக்தி படைத்தவர்? இதற்கு கோவில் நிர்வாகம் உரிய பதில் கூற வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரத்தில் ஒரு நிலை; திருச்செந்துாரில் வேறு நிலை
-சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக, கோவில் நிர்வாகத்தால், காலம் காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதை ஏற்காத ஹிந்து சமய அறநிலைய துறை, காலம் காலமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் திருச்செந்துார் கோவில் ஆனி வருஷாபிஷேக நிகழ்ச்சிக்கு, பக்தர்களை அனுமதிக்க மறுத்துள்ளது. மக்கள் சரியான விழிப்புணர்வு அடையும் வரை தான் இப்படியெல்லாம் அறநிலையத் துறை செய்ய முடியும். கோவில்களில் இருந்து, அறநிலைய துறை விரட்டி அடிக்கப்படும் நாள் தொலைவில் இல்லை.
- அஸ்வத்தாமன், செயலர், தமிழக பா.ஜ.,
உள்நோக்கம் எதுவும் கிடையாது: விமான தளத்துக்கு, 500 பக்தர்கள் முண்டியடித்து ஏறினால், அசம்பாவிதம் நடந்து விடலாம். அதை தவிர்க்கவே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. உள்ளூர் அமைச்சருக்கு நெருக்கமான வி.ஐ.பி., உமரி சங்கர் மனைவி என்பதால் மட்டும் பிரம்ம சக்தி விமான தளத்துக்கு அனுமதிக்கப்பட்டார். அவர், முன் கூட்டியே வந்து விட்டதாலும், பெண் என்பதாலும் மட்டுமே அனுமதித்தோம். வேறு எந்த நோக்கமோ கிடையாது. அவர், விமான தளத்துக்கு செல்லும்போதே, கீழே கூடியிருந்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். -- கோவில் நிர்வாகம், திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவில். - நமது நிருபர் -