பழமை வாய்ந்த சீர்காழி பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2023 02:06
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பழமை வாய்ந்த பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆமப்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 28ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க சர்வ சாதகம் சம்பந்தம் சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்திற்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பழனியாண்டவர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோவில் அர்ச்சகர் கபாலீஸ்வரர் குருக்கள் பூஜைகளை செய்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை பாலசுப்பிரமணியன் செய்திருந்தார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.