வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2023 10:07
காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள வீரசேகர உமையாம்பிகை கோயிலில் நடந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில், சாக்கோட்டை ஆனித் திருவிழா கடந்த ஜூன் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 27 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 63 தவில், நாதஸ்வர இசை கச்சேரியுடன் 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை வீரசேகர பிரியாவிடை உமயாம்பிகை தாயார், விநாயகர் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. விநாயகர் தேர் முதலில் வர தொடர்ந்து வீரசேகர பிரியாவிடை தேரும், உமையாம்பிகை தேரும் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. தேரோட்டத்தில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்.பி., செல்வராஜ் தலைமையில் 3 டி.எஸ்.பி.,க்கள் ஒரு ஏ.எஸ். பி. உட்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.