பதிவு செய்த நாள்
10
ஜூலை
2023
10:07
ஸ்ரீநகர்,-ஜம்மு - காஷ்மீரில் வானிலை சீரானதை அடுத்து, மூன்று நாட்களாக தடைபட்டிருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியது.
ஜம்மு - காஷ்மீரில் இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு ஆண்டுதோறும் யாத்திரையாக செல்லும் பக்தர்கள், இங்கு இயற்கையாக தோன்றிய பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்த ஆண்டு, அமர்நாத் யாத்திரை கடந்த 1ம் தேதி துவங்கியது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் வானிலை மோசமடைந்து திடீர் மழை பெய்ததால், 7ம் தேதி முதல் யாத்திரை நிறுத்தப்பட்டது. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகள் சேதமடைந்ததுடன், ராட்சத பாறைகளும் பாதையில் விழுந்ததால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில இடங்களின் பனிப்பொழிவும் அதிகரித்ததால், குகைக்கோவிலுக்கு சென்றவர்கள் அங்கேயே நிறுத்தப்பட்டனர். மழை சற்று ஓய்ந்து, தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீரானதை அடுத்து, மூன்று நாட்களுக்குப் பின் நேற்று மதியம் முதல் பஞ்சதர்னி, ஷேஷ்நாக் முகாம்களில் இருந்து அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியது. இன்று காலை நடைபெற்ற வழிபாட்டில் ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.