பதிவு செய்த நாள்
10
ஜூலை
2023
12:07
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி பகுதியில் 8ம் நூற்றாண்டை சேர்ந்த திருமால், பத்மநிதி, விநாயகர், வீரபத்திர சிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
திருச்சுழி அருகே முக்குளம் சிறுவனுார் கிராமத்தின் காட்டுப்பகுதியில் பழமையான சிலைகள் இருப்பதாக கல்லுாரி மாணவர்கள் தர்மராஜா, காளிமுத்து ஆகியோர் அருப்புக்கோட்டை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர், கல்லுாரியின் பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், ராஜபாண்டி, நடராஜன் ஆகியோரிடம் கூறினர். அவர்கள் சென்று கள ஆய்வு செய்தபோது சிற்பங்கள் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியரின் சிலைகள் என தெரிய வந்தது.
மேலும் அவர்கள் கூறியதாவது: இங்கு காணப்படும் திருமால் சிலை 4 அடி உயரம் உள்ள கருங்கலில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீட மகுடமும், நீண்ட காதுகளில் பத்திர குண்டலங்களும் கழுத்தில் ஆபரணங்களும், மார்பில் முப்புரி நுாலும் செதுக்கப்பட்டுள்ளது. 4 கரங்கள் உள்ளன. வலது மேற்கரத்தில் சுதர்சன சக்கரமும், இடது மேற்கரத்தில் சங்கும் உள்ளது. வலது முன் கரத்தில் அபய முத்திரை காட்டியும், இடது முன் கரத்தை ஊறுஹஸ்த்தமாக வைத்தபடியும், வலது காலை மடக்கி இடது காலை கீழே தொங்கவிட்டும் மகாராஜா லீலாசனத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்களைப் பாதியளவு மூடிய படியும் உதடுகளில் சிறிய புன்னகையுடன் முக்கால பாண்டியருக்கே உரிய கலை நயத்துடன் தத்துரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பத்மநிதி சிலை சிவன் கோயிலின் கோபுரங்களில் வைப்பது வழக்கம். இவர் குபேரனின் பணியாட்களில் ஒருவர். சிலை 2 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட புடைப்பு கல்லில் உள்ளது. அமர்ந்த கோலத்தில் சிற்பம் உயிரோட்டமாக உள்ளது. இந்த வகை புடைப்புச் சிலைகள் தென் தமிழகத்தில் கிடைப்பது அரிது. விநாயகர் சிலை 4 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டது. நான்கு கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. யோக வீரபத்ர சிலை 2 அடி அகலமும் ஒன்றரை அடி உயரமும் கொண்டது. இதேபோன்று நம்பி சிற்பம், செங்கல் தளி, சிதைந்த நிலையில் சிலை ஆகியவை ஒரே இடத்தில் உள்ளது. இங்குள்ள செங்கல் ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும் கொண்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது இங்கிருந்த சிவன் கோயில் கால ஓட்டத்திலோ அல்லது அந்நிய படையெடுப்பிலும் அழிந்து இருக்க வேண்டும் என கூறலாம். இடிந்த கோயில் இன்னமும் மக்களின் வழிபாட்டில் உள்ளது. இங்குள்ள சிலைகளை பார்க்கும் போது ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம், என்றனர்.