பதிவு செய்த நாள்
29
ஜூலை
2023
07:07
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி சப்பர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை இழுத்து வந்தனர்.
சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்க்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது சுவாமிகள் சர்வ அலங்காரங்களுடன் தினந்தோறும் சிம்மம், அன்னம்,கமலம்,யானை, கிளி, விருஷபம் காமதேனும்,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளிய பின்னர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடி சப்பர திருவிழாவிற்காக கோயில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சக்கரத்திற்கு நேற்று மாலை ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளினார் இதனைத் தொடர்ந்து சன்னதி புதுக்குளம், மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை 4 ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர். சப்பரம் கோயிலை கண்டடைந்த உடன் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சக்கரத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து வழிபட்டனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெற உள்ளது.நாளை 31ம் தேதி சந்தன காப்பு உற்சவத்துடன் இந்தாண்டிக்கான ஆடித் திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன்,ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.