சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே காப்பார அய்யனார் கோயிலுக்கு புரவி ஊர்வலம் சென்றது. காப்பாரப்பட்டி கிராமத்தில் உள்ள காப்பார அய்யனார் மற்றும் கருப்பர் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி 15 நாட்களுக்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டு சிங்கம்புணரி குலாலர் தெருவில் உள்ள பஜனை மடம் முன்பாக புரவிகள், கரடிகள் கருப்பசுவாமி சிலை செய்யப்பட்டது. ஜூலை 31 ல் புரவியெடுப்பு ஊரவலம் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு ஒரு அரண்மனைப் புரவி, கரடி பொம்மை, 3 நேர்த்திக்கடன் புரவி என 7 புரவிகளும், 70-க்கும் மேற்பட்ட நேர்த்திக்கடன் பொம்மைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. சந்திவீரன் கூட முன்பாக சாமியாடிகள் அரிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு கூறி சென்றனர். இரவு 7:00 மணிக்கு புரவிகள் ஊர்வலம் காப்பாரப்பட்டி சென்றடைந்தது. நேற்று அங்கிருந்து கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வழிபாடு நடந்தது.