பதிவு செய்த நாள்
03
ஆக
2023
01:08
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தீர்த்தவாரி நடந்து, கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஜூலை 24 துவங்கி ஆடி பிரம்மோற்ஸவ விழா நடந்தது. மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக நடந்த ஆடி விழாவில், நேற்று காலை தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதன்படி காலை 11:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு தீர்த்த மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு 11 வகையான நெய்வேத்தியங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பின்னர் பெருமாள் வெண்பட்டு குடையுடன் மேளதாளம், சங்கு, சேகண்டி இசைக்க புறப்பாடாகினார். அப்போது வைஷ்ணவ கோஷ்டியினர் பிரபந்தங்கள் இசைத்தும், பாகவதர்கள் பஜனை பாடி சென்றனர். மேலும் கத்தி, வாள், சிலம்பம் சுற்றியபடி பக்தர்கள் சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து சுவாமி கோயிலை அடைந்த பின் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு சன்னதி கருடனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, நள்ளிரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.