பதிவு செய்த நாள்
10
ஆக
2023
03:08
திருத்தணி: திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சி நத்தம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் யாத்ரீகர்கள், திருப்பதி மற்றும் திருத்தணி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்குவர்.
தற்போது மண்டபம் பழுதடைந்து உள்ளது. இருப்பினும், ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து, தற்போதும் ஆடிக்கிருத்திகை விழாவின் போது காவடிகளுடன் நத்தம் மண்டபத்தில் தங்கி வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் நத்தம் மண்டபத்திற்கு வந்து தங்கினர். இரவு, 9:00 மணியளவில், அங்கு தங்கியிருந்த பக்தர் ஒருவர் மீது சாமி வந்து அருள்வாக்கு கூறி, மண்டபத்திற்குள் ஒரு பகுதியை காட்டி நிலத்தை தோண்டுமாறு கூறினார். அங்கு தோண்டிய போது, இரண்டரை அடி உயரமுள்ள, மயில் மேல் அமர்ந்துள்ள கற்சிலை ஒன்று இருந்ததை கண்டெடுத்தனர். தொடர்ந்து, நத்தம் கிராம மக்கள், சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். தகவல் அறிந்ததும், திருத்தணி தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து, கற்சிலையை கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆடிக்கிருத்திகை என்பதால், முருகர் சிலையை மூன்று நாட்கள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் உத்தரவு பெற்று எங்கள் கிராமத்திலேயே முருகர் சிலையை வைத்துக் கொள்வதற்கு அனுமதி கோருகிறோம் என, கடிதம் எழுதி, ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராமத்தினர் தாசில்தாரிடம் கொடுத்தனர். இதையடுத்து, வருவாய் துறையினர் அங்கிருந்து புறப்பட்டனர்.
இது குறித்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா கூறியதாவது: நத்தம் மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட முருகர் சிலையை, முறைப்படி கருவூலகத்திற்கு கொண்டு வருவோம். பின், கிராமத்தினர் ஒப்புதல் கொடுத்து கடிதம் எழுதி கொடுத்தால், கற்சிலையை அவர்களிடம் ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஆடிக்கிருத்திகை விழா என்பதால், இரு நாட்கள் அந்த கிராமத்திலேயே சிலை இருக்கும். அதுவரை வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.