பதிவு செய்த நாள்
14
ஆக
2023
03:08
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் பாழடைந்த தெப்பக்குளம் சீரமைத்து தண்ணீர் கொண்டு வரும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
திருக்கோவிலூரில் பழமை வாய்ந்த தீர்த்த குளம், தெப்பக்குளங்கள் உள்ளது. ஊருக்கு மத்தியில் இருக்கும் இக்குளத்திற்கு தண்ணீர் ஏரியிலிருந்து வரும் வகையில் பாதாள கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. புராதானமான இக்குளத்திற்கான நீர்வரத்து ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கையால் பாதாள கால்வாய் துந்து போனது. இதன் காரணமாக தெப்பக்குளம், தீர்த்த குளங்களுக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வராததால் தீர்த்தக்குளம் வற்றிய நிலையில், தெப்பக்குளத்தில் முள் முளைத்து, நீராழி மண்டபம் சிதிலமடைந்து, குளத்தின் படிக்கட்டுகள் சரிந்து பாழ்பட்டது. ஏரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயை சீரமைத்து குளத்தை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில், தினமலர் இது குறித்து தொடர்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பயனாக சட்டசபை மானிய கோரிக்கையின் பொழுது இந்து சமய அறநிலையத்துறை குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டது. நிர்வாக நடவடிக்கை காரணமாக ஓராண்டுக்கு மேலாக பணி தாமதப்பட்ட நிலையில், ஒரு வழியாக ஒப்பந்த பணிகள் நிறைவடைந்து, நேற்று சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது.
உலகளந்த பெருமாள் கோவில் ஏஜென்ட் ஏற்பாட்டில், முரளி ஐயர் பூமி பூஜையை முன் நின்று நடத்தினார். நகராட்சி சேர்மன் முருகன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, ஆணையர் கீதா, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி கோட்ட பொறியாளர் வசந்த், மணி, ஆய்வாளர் பாக்கியலட்சுமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்ததாரர் முஸ்டாக் அகமது நன்றி கூறினார். விரைவில் பணிகள் துவங்கப்பட இருக்கும் நிலையில், கடந்த ஆட்சியில் குளம் சீரமைப்பு பணி முறையாக செய்யப்படாமல் கைவிடப்பட்டதை போல் இல்லாமல். ஏரியிலிருந்து தண்ணீர் வந்து தெப்பக்குளம், தீர்த்த குளங்கள் நிரம்பி, நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், பக்தர்கள் விரும்பியது போல் தெப்பக்குளத்தில் பெருமாள் தெப்பத்தில் உலா வரும் நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே மக்களின் கருத்து.