பதிவு செய்த நாள்
16
ஆக
2023
10:08
திருச்சி: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில், அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இறந்து போன தங்களின் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் ஆசி குடும்பத்திற்கு கிடைக்கவும் வேண்டி, ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யப்படுவது வழக்கம். இதில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதத்தில் வரும், அமாவாசை தினத்தில், தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த நாளில் புனித நதிகளில், கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி அமாவாசை என்பதால், திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக குடும்பம், குடும்பமாக வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்தனர். அதிகாலை, 4 மணியில் இருந்தே ஏராளமானோர் வந்து காவிரியில் நீராடினர். பின் இவர்கள் காவிரி கரையில் தர்ப்பணம் செய்தனர். தர்ப்பணம் செய்து வைப்பதற்காக, நூ ற்றுக்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வந்திருந்தனர். ஏராளமானோர் குவிந்திருந்ததால், தனித்தனியாக செய்ய நேரம் இல்லாததால், 15 பேர் வரை ஒன்றாக அமர வைத்து, அவர்களுக்கு புரோகிதர்கள் தர்ப்பணம் செய்து வைத்தனர். ஆயிரக்கணக்கானோர் கூடியதால்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.