சாணார்பட்டி: மேட்டுகருப்பணசாமி கோவில் புறவி எடுப்பு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி முன்னதாக நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கோவிலிலிருந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக செய்த கருப்பணசுவாமி, மதுரை வீரன், கன்னிமார் தெய்வங்கள், குதிரை,பசு, உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட சிலைகள் கோவிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சாணார்பட்டி பஸ்ஸடாப் அருகே அலங்கரிக்கப்பட்ட பந்தலில் வரிசையாக வைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு சாமி சிலைகளுக்கு தீர்த்தம் தெளித்தல், கிராம தெய்வங்களுக்கு பலம் வைத்தல், பின்னர் சந்தனகுடம் எடுத்து ஊர்வலமாக வருதல், அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து சாமி கண் திறத்தல் நடைபெற்றது. மாலை வாணவேடிக்கை மேளதாளத்துடன் சிலைகள் ஊர்வலமாக எடுத்து கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் சாணார்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று கருப்பணசுவாமியை வழிபட்டனர்.