பதிவு செய்த நாள்
18
ஆக
2023
05:08
மேட்டுப்பாளையம்: ஆவணி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, ரூபாய் நோட்டு அலங்காரத்தில் தவிட்டு மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்து வந்தனர். பெரும்பாலான கோவில்களில் இன்று ஆவணி மாதம் பிறந்தாலும், அதை ஆடி மாதத்தின் ஐந்தாவது வெள்ளிக்கிழமையாக, பக்தர்கள் கடைபிடித்து கோவில்களில் அம்மனுக்கு அலங்கார பூஜை செய்து வழிபட்டனர். மேட்டுப்பாளையம் காட்டூர், ஜெகநாதன் லே அவுட்டில் தவிட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத ஐந்தாவது வெள்ளிக்கிழமை மற்றும் ஆவணி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்தனர். நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு, அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யும் பணியில், கோவில் அர்ச்சகர், பக்தர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு, அலங்காரம் செய்து முடித்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இது குறித்து கோவில் அர்ச்சகர் லோகேஸ்வரன் கூறுகையில், பக்தர்கள் வழங்கிய ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. நான்கு வாரம் நடந்த விழாவை காட்டிலும், ஐந்தாவது இந்த வாரம் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர், என்றார்.