பதிவு செய்த நாள்
23
ஆக
2023
03:08
அவிநாசி: தண்ணீர்பந்தல் பாளையம் விநாயகர், மாகாளியம்மன் மகா முனியப்பசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேவூர் அருகே தண்ணீர்பந்தல் பாளையத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர் மாகாளியம்மன், மகா முனியப்பசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அவிநாசி வட்டம், சேவூர் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள விநாயகர், மாகாளியம்மன், மகா முனியப்பசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடத்த வெள்ளிக்கிழமை குட்டகம் மொக்கணீஸ்வர் கோவிலிருந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து, நான்கு கால யாக வேள்வி பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக, இன்று விநாயகர், மாகாளியம்மன், மகா முனியப் சுவாமி கோவிலின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஜண்டை வாத்திய முழங்க யானை ஊர்வலத்துடன் கலசங்களுக்கு அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீ காமாட்சிதாச சுவாமிகள் தலைமையில், ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஸ்வத சித்தாந்த சுவாமிகள் மற்றும் மொக்கனீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் தியாகு, லட்சுமி நரசிம்மர் கோவில் அர்ச்சகர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மஞ்சள், புஷ்ப அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், கிருபானந்த வாரியாரின் மாணவி தேச மங்கையர்க்கரசி நிகழ்ச்சிகளை தொகுத்து வர்ணனை செய்து பக்தி சொற்பொழிவாற்றினார். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு,திருப்பணிக்குழுவினர் மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.