பதிவு செய்த நாள்
24
ஆக
2023
03:08
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததும் தேவாரப் பாடல்கள் பெற்றதுமான இத்தலத்தில் அபயாம்பிகை சிவபெருமானை பூஜித்து மயில் உரு நீங்கியதாக புராண வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற செப்டம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மனைவியுடன் மாயூரநாதர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அழைக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் கோவில்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சர் கோவில் திருப்பணிகளை பார்வையிட்ட ஆய்வு செய்தவுடன் கும்பாபிஷேகத்தை சிறப்பாக செய்திடவும் திருப்பணிகளை கண்காணிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரை நியமிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு சீர்காழி சட்டை நாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததுடன் கும்பாபிஷேக திருப்பணி என்பது கண்டெடுக்கப்பட்ட தேவாரப் பதிகங்கள் பதிக்கப்பட்ட செப்பேடுகள் மற்றும் தெய்வத் திருமேனிகளை பார்வையிட்டார். முன்னதாக கோவில் நிர்வாகி செந்தில்குமார் தலைமையில் சிவாச்சாரியார்கள் அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்; தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் குடமுழுக்கு விழா 18 ஆண்டுகளுக்கு பின்பு ரூ.9 கோடி செலவில் அதில் 2 கோடி இந்து சமய அறநிலைத்துறை, 7 கோடி உபயதாரர்கள் நிதியுடனும், இதே போல் துக்காட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 3 கோடி 60 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரர்கள் நிதியோடு வருகிற 3ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்கு முன்பு துக்காச்சி அம்மன் குடமுழுக்கு விழா நடந்ததற்கான சான்று இல்லை. திமுக அரசு பொறுப்பு ஏற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் 918 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி உள்ளது. இதில் 30 கோயில்களுக்கு மேல் 100 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு விழா திமுக ஆட்சியில் தான் நடந்துள்ளது. இதே போல் கடந்த இரண்டு ஆண்டுகளில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 27 கோயில்களில் 23 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடந்துள்ளது. தெய்வங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் ஆட்சியாக திமுக உள்ளது. இதுவரையில் தேவாரம் ஓலைச்சுவையாகவும், நூல்களாகவும் தான் கிடைத்துள்ளன ஆனால் முதன்முறையாக சீர்காழி சட்டைநாதர் கோயில் வளாகத்தில் தான் செப்பேடுகள் கிடைக்கப்பட்டுள்ளது. இதில் 110 முழுமையான செப்பேடுகளும் 83 சிதலமடைந்த செப்பேடுகளும், 23 ஐம்பொன் திருமேனி சிலைகளும், 13 பூஜை பொருள்களும் கிடைக்கப் பெற்றுள்ளது. செப்பேடுகளை மொழிபெயர்ப்பு செய்ய தொல்லியல் துறை உதவியோடு தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி ஆன்மீக புரட்சிக்கு வித்திடும் வகையில் ஆன்மீகவாதிகள், இறைஅன்பர்கள், மடாதிபதிகள் மகிழ்ச்சியோடு இருக்கின்ற மகிழ்ச்சி கலந்த ஆன்மீக ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்ய நாதன், எம்.பி. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் பூம்புகார் நிவேதா எம் முருகன், சீர்காழி பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன், ஆர்டிஓ. அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டா பலர் உடன் இருந்தனர்.