பதிவு செய்த நாள்
28
ஆக
2023
01:08
உத்தமபாளையம்; உத்தமபாளையம் யோகநரசிங்கபெருமாள் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு பெருமாளுக்கும், சீதேவி, பூதேவிக்கும் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
உத்தமபாளையம் நகரின் மையப்பகுதியில் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த மகாலட்சுமி தாயார், ஆண்டாள் நாச்சியார் உடனுறை யோகநரசிங்கபெருமாள் கோயில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 5 வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.நேற்று சுதர்சன ஹோமம், உற்சவர் பெருமாள், தாயார்களுக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. இன்று அதிகாலை இரண்டாம் கால பூஜைகள், வருஷாபிஷேக பூஜைகள், ஹோமம் ஆரம்பமானது. தொடர்ந்து பெருமாள், தாயார்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.15 மணியிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டு, காலை 10.15 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியர் கழுத்தில் மங்கள நாண் சூடினார். கூடியிருந்த திரளான பக்தர்கள் ஒம் நமோ நாராயணா என கோஷமிட்டனர். பெருமாள் வெண்பட்டிலும், தாயார்கள் பச்சை, சிவப்பு பட்டிலும், சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். முன்னதாக காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் இருந்து அதன் அர்ச்சகர் மணிவாசகம், பெருமாளுக்கும், தாயார்களுக்கும் கல்யாண சீர் கொண்டு வந்தார். திருக்கல்யாண நிகழ்ச்சிகளை அர்ச்சகர் ரெங்கராசன், முத்து உள்ளிட்டோர் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளஞ்செழியன், ஒம் நமோ நாராயணா பக்த சபை தலைவர் ஹரஹர அய்யப்பன், செயலாளர் ரவி, உறுப்பினர்கள் அசோக், பாலமுருகன், குமார், ஞானவேல், பரசுராமன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான உபயதாரர்கள் ஸ்ரீதரன், பழனிவேல்ராசன், முத்துச்சாமி பிள்ளை, ஆசிரியை மணியம்மாள் உள்ளிட்டோர் இருந்தனர்.