பதிவு செய்த நாள்
28
ஆக
2023
06:08
வடமதுரை; வடமதுரை அருகே காணப்பாடி ஊராட்சி ராமநாதபுரத்தில் கோட்டை முனியப்பன், காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் கோயில் ஆவணி திருவிழாவில் நடந்த பாரிவேட்டையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழா கடந்த ஆக.20 காலை தீர்த்தம் தெளித்தல், இரவு கிராமத்தில் தேங்காய், பழம் வைத்து சுவாமி சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. நேற்று இரவு கலை நிகழ்ச்சிகளுடன் அம்மன்கள் கரகம் ஊர்வலமாக கோயில் வந்தன. இன்று காலை முளைப்பாரி, மாவிளக்கு, அக்கினிச்சட்டி, வேல், பந்தம் எடுத்து நகர் வலம் வருதல் என பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை செய்தனர். தொடர்ந்து பொங்கல் வழிபாட்டிற்கு பின்னர் உறவினர், நண்பர்களுக்கு அசைவ விருந்து வழங்கினர். முக்கிய நிகழ்ச்சியாக பாரி வேட்டை எனும் பாரம்பரிய புலி வேட்டை நடந்தது. புலி வேஷம் அணிந்தவரை வேட்டைக்காரர்கள் போல திரளாக சென்று வேட்டை ஆடுவது போல பாாிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. நாளை மாலை மஞ்சள் நீராட்டுதல், அம்மன்கள் கங்கை செல்லும் நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.