பதிவு செய்த நாள்
30
ஆக
2023
03:08
பல்லடம்; சந்திரயான் 3 வெற்றி எதிரொலியாக, பல்லடம் அருகே, சந்திரன் மீது அமர்ந்தபடியான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது. இந்த வெற்றியின் எதிரொலியாக, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சந்திரன் மீது அமர்ந்த நிலையில் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிலை தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில், கடந்த, 14 ஆண்டுகளாக விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டுக்கு, 500க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரித்து, திருப்பூர், பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வருகிறோம். நடப்பு ஆண்டு, 300க்கும் குறைவான சிலைகளே தயாரித்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும், வங்கி கடன் பெற்று சிலை தயாரித்து, விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் கடனை திருப்பி செலுத்துவது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக வங்கி கடன் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. நிலுவையில் உள்ள கடனை செலுத்தாமல், புதிய கடன் வழங்க மாட்டோம் என வங்கியினர் தெரிவித்ததே, சிலை தயாரிப்பு குறைந்ததற்கு காரணம். ஆர்டர்கள் இருந்தும், முதலீடு செய்து எங்களால் சிலை தயாரிக்க முடியவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி, இயற்கையான முறையில்தான் சிலை தயாரித்து வருகிறோம். போதிய வங்கிக்கடன் வழங்கி, சிலை தயாரிப்பை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
சந்திரயான் விநாயகர் அறிமுகம்; ஒவ்வொரு ஆண்டும், அப்போதைய சூழலுக்கு ஏற்ப புதிதாக விநாயகர் சிலைகளை அறிமுகப்படுத்துவோம். நடப்பு ஆண்டு, சந்திரயான் 3 வெற்றி எதிரொலியாக, சந்திரன் மீது அமர்ந்த விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் நிலவில் தரையிறங்கிய இடத்தை சிவசக்தி என பிரதமர் மோடி பெயரிட்டுள்ளார். அதுபோல், நாங்கள் சந்திரன் மீது அமர்ந்தபடியான சந்திரயான் விநாயகரை வடிவமைத்துள்ளோம் என்றார்.