பதிவு செய்த நாள்
06
செப்
2023
01:09
சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக, புதுச்சேரி ஆலோசனை குழு தலைவராக மூன்றாவது முறையாக ஏ.ஜெ.சேகர் நியமிக்கப்பட்டார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், பல மாநிலங்களில் திருமலை போல பெருமாள் கோவில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள தேவஸ்தானத்தின் செயல்பாடுகளை நிறைவேற்ற ஆலோசனை குழு தலைவர் நியமிக்கப்படுவார். அவரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள். கடந்த 2019, 2021ம் ஆண்டுகளில் தமிழக, புதுச்சேரி மாநில ஆலோசனை குழு தலைவராக ஏ.ஜெ.சேகர் நியமிக்கப்பட்டார். மூன்றாவது முறையாக மீண்டும் ஆலோசனை குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நகலை திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, ஏ.ஜெ.சேகரிடம் வழங்கினார். இவரது முயற்சியில் கன்னியாகுமரி, உளுந்துார் பேட்டையில், பெருமாள் கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை தீவுத்திடல் மற்றும் புதுச்சேரியில் பிரமாண்ட திருக்கல்யாண உற்சவங்கள் நடத்தப் பட்டன. தி.நகரில் பத்மாவதி தாயார் கோவில் அமைக்கப்பட்டது. திருப்பதி, அலிபிரியில் தேவஸ்தானம் அளித்த 5 ஏக்கரில், 16 கோடி ரூபாயில் பசுக்களுக்கு தனி கோவில் அமைக்கப்பட்டது. நடை பயணம் செய்யும் பக்தர்கள் கோ - பிரதக்ஷனம், கோபூஜை செய்து படியேறுகின்றனர். தற்போது, சென்னை தி.நகர், வெங்கட்ரமணா சாலையில் உள்ள பெருமாள் கோவில், பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.