ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2023 04:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். இன்று மதியம் 12:30 மணிக்கு கோயிலுக்கு வந்த அண்ணாமலையை, மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் கோயிலுக்கு வந்த அண்ணாமலை கொடி மரத்தை வணங்கி, லட்சுமி நரசிம்மரை தரிசித்து விட்டு ஆண்டாள் சன்னதிக்கு வந்தார். ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சாற்றுவதற்காக மாலைகள், பழங்கள், மங்கல பொருட்களை கோயில் பட்டர்களிடம் அண்ணாமலை வழங்கினார். சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பட்டர்கள் அண்ணாமலைக்கு மாலை, கிளி, பரிவட்டம் வழங்கி மரியாதை செய்தனர். கோயில் வரலாறு குறித்து வேதபிரான் சுதர்சனிடம் அண்ணாமலை கேட்டறிந்தார். பின்னர் கண்ணாடி கிணறு, தங்க விமானம் தரிசனம் செய்துவிட்டு வட பத்ரசயனர் சன்னதிக்கு வந்து தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை வணங்கினார். பின்னர் மணவாள மாமுனிகள் சன்னதியில் சடகோப ராமானுஜர் சுவாமிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பக்தர்கள் ஆர்வம்: கோகுலாஷ்டமியை முன்னிட்டு இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆண்டாள் கோவிலுக்கு வந்திருந்தனர். அப்போது கோவிலுக்கு வந்த அண்ணாமலையை பார்த்து சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த ஆர்வத்துடன் வாழ்த்து தெரிவித்தும், கைகுலுக்கியும், போட்டோ எடுத்ததும் மகிழ்ந்தனர்.