தேவிபட்டினம் சக்கர தீர்த்த குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2023 01:09
தேவிபட்டினம்: தேவிபட்டினம் சக்கர தீர்த்த குளத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி குளத்தை சீர் செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரக கோயில் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்திகள் வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். இங்கு வருகை தரும் பக்தர்கள் நவக்கிரகங்கள் அமைந்துள்ள கடல் பகுதியில் நீராடி விட்டு, எதிரே உள்ள சக்கர தீர்த்த குளத்தில் புனித நீராடி செல்வது வழக்கம். ஆனால் சக்கர தீர்த்த குளத்தில் உள்ள தண்ணீர் பல ஆண்டுகளாக வெளியேற்றபடாத நிலையில் உள்ளதால், குளத்து நீர் பச்சை நிறத்தில் மாறி துர்நாற்றம் வீசி வருவதுடன், குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இத்தகைய துர்நாற்றத்துடன் கூடிய குளத்து நீரில் பக்தர்கள் நீராடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே மாசடைந்த குளத்து நீரை வெளியேற்றி குளத்தை சீர் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.