திருச்செந்துாரில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2023 03:09
திருச்செந்துார்: திருச்செந்துார் ஆவணித் திருவிழாவில் இன்று பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் அருள்பாலித்தார்.
திருச்செந்துார் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சியளித்தார். இன்று பச்சை சாத்தி கோலத்தில் அருள்பாலித்தார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று 7ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடந்தது. ஒரே நேரத்தில் சிறப்பு தீபாராதனை அதனைத் தொடர்ந்து சண்முக விலாசத்தில் காலை 8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமானின் ஆறுமுகங்களுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு பட்டு அணிந்து, சிவப்பு மாலை அணிந்து சிவப்பு சாத்தி, சிவன் அம்சத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 8ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சத்தில் வெள்ளை சாத்தி வீதி உலா, மதியம் 2 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.