சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திமுக அமைச்சர்கள்; சங்கல்ப பூஜை செய்து பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2023 01:09
மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் கோவிலில் திமுக மூத்த அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம் ஆகியோர் பக்தி சிரத்தையுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப் பாடல் பெற்ற திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மலைக்கோவிலான இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் ஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கி சுவாமியுடன் காட்சி அளித்த இத்தலத்தில் அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற இக்கோவில் வளாகத்தில் முதல் முறையாக தேவாரப் பாடல் பதிக்கப்பட்ட செப்பேடுகள் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு திமுக மூத்த அமைச்சர்கள் கே.என். நேரு, எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகி செந்தில் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அமைச்சர்கள் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டநாதர் மற்றும் திருநிலை நாயகி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று தங்களது மற்றும் தங்களது குடும்பத்தினர் பெயர்களை சொல்லி சங்கல்பம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர் அப்போது அவர்கள் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தேவார செப்பேடுகள் வைக்கப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டனர். தொடர்ந்து அமைச்சர்களுக்கு தருமபுரம் ஆதீன கட்டளை சுப்பிரமணிய தம்புரான் சுவாமிகள் பரிவட்டம் கட்டி, பிரசாதங்களை அளித்து அருள் ஆசி வழங்கினார். திமுக தலைமை சனாதன எதிர்ப்பு என்றெல்லாம் முழங்கி வரும் நிலையில் திமுக அமைச்சர்கள் பக்தி சிரத்தையுடன் கோவிலுக்கு வந்து ஒவ்வொரு சந்ததிகளாக சென்று சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.