பதிவு செய்த நாள்
25
செப்
2023
10:09
கோவை:எல்லாம் அழியக்கூடிய இந்த உலகத்தில் அழியாதது, நிலையானது, சனாதன தர்மம் மட்டும்தான், என, ஆச்சார்யா ஸ்ரீரங்காஜி பேசினார். கோவை ராம்நகரில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஆச்சார்யா ஸ்ரீரங்காஜி பேசியதாவது: சனாதன தர்மம் என்றால் என்ன என்று தெரியாமல், சிலர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். தெரியாத விஷயங்களை பற்றி பேசாமல் இருக்க வேண்டும். அப்படி பேசினால் அது உளறல் என்றுதான் அர்த்தம்.
இந்து தர்மத்தை பின்பற்றும் நாம், சனாதன தர்மம் என்னவென்று சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். அதை பின்பற்றக்கூடிய சக்தி, நமக்கு இருக்க வேண்டும். எது சரியாக, உண்மையானதாக, நிரந்தரமாக இருக்கிறதோ, அதுவே சனாதன தர்மம். இயற்கையின் நியதியாக, இறைவனின் தன்மையாக இருப்பதுதான், சனாதன தர்மம். நமது வாழ்க்கையின் இறுதி லட்சியம், மோட்சம் பெறுவதாக இருக்க வேண்டும். அதை பெறுவதற்கு இறைவன் நமக்கு அளித்த தர்மத்தை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நிறைவாகும். தர்மத்தை பின்பற்றுவோர், உண்மையை பேச வேண்டும், மற்றவர் பொருளை எடுக்க நினைக்க கூடாது. பிறருக்கு தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு ஒன்று வேண்டும் என்றால், அதை இறைவனிடம் கேளுங்கள். பகவான் கொடுத்தால் அதை நீங்கள் அனுபவிக்கலாம். கொடுத்தே ஆக வேண்டும் என, பகவானை நிர்பந்திக்கக்கூடாது. வேண்டியது கிடைக்கும் வரை, இறைவனை துதித்துக் கொண்டே இருங்கள். சனாதன தர்மத்தின் மொத்த உருவம் இறைவன். ஸ்ரீராமர், சிவன், அம்பாள் எல்லோரும் தர்மத்தின் உருவங்கள் தான். எல்லாம் அழியக்கூடிய இந்த உலகத்தில் அழியாதது, நிலையானது சனாதன தர்மம் மட்டும்தான். இவ்வாறு, அவர் பேசினார்.