பதிவு செய்த நாள்
27
செப்
2023
11:09
புதுடில்லி: கனடாவில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், அங்கு வசிக்கும் ஹிந்துக்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுப்பதுடன், கோவில்களையும் சேதப்படுத்தி வருகின்றனர். நம் நாட்டின் பஞ்சாபிலும் வன்முறைகளை துாண்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவுக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான உறவு மோச மடைந்து உள்ளது. இதையடுத்து, கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, பல உளவு அமைப்புகளின் கூட்டு கூட்டம் ச மீபத்தில் நடந்தது. இதில், நம் வெளியுறவுத்துறை, உள்துறை அமைச்சக உயரதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக உளவு அமைப்பு உயரதிகாரிகள் கூறியதாவது: காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், கனடாவில் இருந்து நீண்டகாலமாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆனால், சில ஆண்டுகளில் இவர்களது ஆதிக்கம் கனடாவில் அதிகரித்துள்ளது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில், இந்த விவகாரத்தை கனடா அரசு பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. கடந்த சில மாதங்களாக, இந்திய துாதரகம் மற்றும் துாதரக அதிகாரிகளுக்கு வெளிப்படையாகவே காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும், அங்கு சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுடன், அவர்களுக்கு பகிரங்கமாக மிரட்டலும் விடுக்கின்றனர்; கனடாவில் உள்ள ஹிந்து கோவில்களையும் சேதப்படுத்துகின்றனர். வியன்னா ஒப்பந்தத்தின் படி, தன் நாட்டில் உள்ளவெளிநாட்டு துாதரகம் மற்றும் அதிகாரிகளுக்கு அந்தந்த நாடுகள் பாதுகாப்பு அளிக்கவேண்டும். இதில், கனடா அரசு தோல்வியடைந்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அமைப்புகளுக்கு எடுத்து செல்லப்படும். காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில், பல புதியதகவல்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன், இவர்களுக்கு தொடர்பு உள்ளது.அங்கிருந்து, நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்துக்கு போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். இதன் வாயிலாக கனடாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணம் கிடைக் கிறது. இதைத் தவிர, பஞ்சாபில் பலவன்முறை மற்றும் குற்றச் செயல்களிலும், கனடாவில் இருந்தே இந்த பயங்கரவாதிகள் நிறைவேற்றி வந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.